இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Friday, February 11, 2011

தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளில் மாயமான 4, 600 பேர்! தூங்கும் காவல்துறை

தமிழகத்தில், கடந்த 2003 முதல் 2010ம் ஆண்டு வரை 4,612 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில், 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் மட்டும் 1,014 பேர்.

இவர்களைப்பற்றி, ஏழு ஆண்டுகளாக எந்தவித தகவலும் கிடைக்காமல் இருப்பது, அவர்களின் உறவினர்களை மட்டுமில்லாமல் போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பொதுவாக, வீட்டில் உள்ள ஒருவரை காணவில்லை என்றால், உடனே போலீசை நாடுகின்றனர். சிலர், சில நாட்கள் தேடிப்பார்த்து, அதன்பின் போலீசில் புகார் அளிக்கின்றனர். போலீசாரும், காணாமல் போனவர்களை அக்கறையுடன் தேடுகின்றனர்.

குறிப்பாக, பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் என்றால் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், பள்ளி மாணவர்கள் அல்லது குழந்தைகள் என்றால், கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது, வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம் என்பதால் நடவடிக்கை துரிதமாக இருக்கும்.

அந்த வகையில், கடந்த 2003ம் ஆண்டு முதல், கடந்தாண்டு இறுதி வரை பதியப்பட்ட 4,545, " மிஸ்சிங்' வழக்குகளில், 4,612 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்களில், 18 வயதுக்குட்பட்டவர்கள் 1,014 பேர். 2010ல் பதிவான 6,519 வழக்குகளில், 4,637 பேர் (71 சதவீதம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 1,882 பேர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வீட்டை விட்டு காணாமல் போவது என்பது மனநலம் பாதிக்கப்படுதல், வீட்டில் பிரச்னை, காதல் பிரச்னை என்று பல காரணங்களைக் கூறலாம்.

ஆனால், 18 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது, மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள சூழலில் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன. எனவே, நல்லது எது; கெட்டது எது என பிரித்துப் பார்க்க முடியாத காலகட்டத்தில் இருப்பவர்கள், தாங்களாக பிடிக்காமல் சென்றிருந்தாலோ, இல்லை யாராவது ஏமாற்றி அழைத்துச் சென்றிருந்தாலோ, அவர்களின் வாழ்க்கையின் பாதையே மாறிப்போய் இருக்கும்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் சிக்கினால் விளைவு என்னவாகும் என்பது எதிர்பார்க்க முடியாதது. எனவே, 18 வயதுக்குட்பட்டர்வர்கள் காணாமல் போகும் போது, அவர்களை அதிக சிரத்தையுடன் தேடுவது அவசியம்.

காணாமல் போன வழக்குகளில் இடம் பெறுபவர்களில் பலரின் நிலை, கொலை, தற்கொலை என்றும் முடிந்து விடுகிறது.சென்னையில், கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் காணாமல் போய், இறுதியில் போரூர் ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவினாசியைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், பணி முடித்து வரும் வழியில் மாயமானார். பின்னர் அவர், கற்பழித்து கொல்லப்பட்ட நிலையில், கோவையில் பள்ளிக்குச் சென்ற அக்காள், தம்பியான முஸ்கன் மற்றும் ரித்திக் ஆகியோர், கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.

இதை மனதில்கொண்டு, காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கை, ஏதோ கடமையாக கருதி, "தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை' என, "பைலை குளோஸ்' செய்யாமல், அவர்களை கண்டுபிடிக்க போலீசார் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

அது நடக்காத வரை, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகளும், வழக்குகளும் அதிகரித்துகொண்டு தான் இருக்கும். தலைநகரில் கடத்தல்கள் அதிகரிக்கிறதா? சென்னை நகரில், கடந்த ஆண்டு 1,576 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதில், 18 வயதுகுட்பட்ட 23 ஆண், 11 பெண்கள் உள்ளிட்ட 321 பேர் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. சென்னை புறநகரில் காணாமல் போன 1,003 பேரில், 740 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 263 பேரில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் 20பேர் பெண்கள் 43. புறநகரில் காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது.இது தவிர, தமிழகத்தின் மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களிலும் காணாமல் போன 18 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் செயல்கள், பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் செயல்களில் சமுதாயத்தில் அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் மாயமான சிறுவர்கள் உள்ளார்களா என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.

அனாதையான 297 உடல்கள்தமிழகம் முழுவதும் நடக்கும் சாலை, ரயில் விபத்துக்களில் மரணமடைந்த 297 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல், அந்தந்த பகுதி மருத்துவமனை பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதில், ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு அடையாளம் காணப்படாத உடல்கள் மட்டும் 201. இவற்றின் விவரங்கள் போலீஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோல், காவல்துறை இணையதளம் வாயிலாகவும் காணாமல் போனவர்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.தேவை தனிப்பிரிவு காணாமல் போனவர்கள் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் புகார் அளித்தால், அவர்கள் தங்களுக்குள்ள மற்ற பணிகளின் இடையில் இதையும் சேர்த்துப் பார்க்கின்றனர்.

பாதுகாப்புப் பணிகள், ஆர்பாட்டம், ஊர்வலம் இவை அதிகமாக இருக்கும்போது, "மிஸ்சிங்' புகார் வந்தால் கண்டுகொள்வதில்லை. அதுவே, வி.ஐ.பி.,க்கள் வீட்டு குழந்தைகள் என்றால் மட்டும், கண்டுபிடிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

மற்றவர்களாக இருந்தால், போலீசார் அப்படியே விட்டுவிடுகின்றனர். இந்த நிலையால் தான் இன்னும் 4,612 பேரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, சில குறிப்பிட்ட குற்றங்களை கட்டுப்படுத்த தனிப்பிரிவு போலீசார் இருப்பதைப் போல், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு அமைத்தால் உரிய பலன் கிடைக்கும்.

THANKS : TAMIL CNN

No comments:

Post a Comment