இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, February 12, 2011

10ம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம்

புதுடில்லி:ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்ற சட்டம், வரும் 2015ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு, தற்போது, மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேறியிருந்தால் போதும். அந்த சட்டத்தில் தற்போது, திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தப்பட்ச கல்வி தகுதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக, போக்குவரத்து துறை அமைச்சக முன்னாள் செயலர் சுந்தர் தலைமையில், கமிட்டி ஒன்று, கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்கமிட்டி 411 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வறிக்கையை அண்மையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஷியிடம் தாக்கல் செய்தது.அதில், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை 10ம் வகுப்பாக அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துத் துறையின் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்குவதற்கு, எட்டாம் வகுப்பு தகுதியும், ஓராண்டு இலகுரக வாகனங்களை இயக்கிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.இதிலும், கல்வி தகுதி பத்தாம் வகுப்பாக அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது நிறுவனத்திடமிருந்து தகுதி சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த முறையில், நான்கு மாதங்களுக்கு மட்டுமே பழகுனர் உரிமம் வழங்கப்படும். மேலும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள், அந்நாட்டினரால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமத்தின் அடிப்படையில், எந்தவித சோதனையும் இன்றி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.இதிலும், சுந்தர் கமிட்டியின் பரிந்துரைப்படி மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, வெளிநாட்டை சேர்ந்தவர்கள், இங்குள்ள நடைமுறைகளின் படி, அனைத்து சோதனைகளுக்கு பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வரும் 2015ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

THANKS : DINAMALAR

No comments:

Post a Comment