இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, January 29, 2012

கடுமையாகிறது போக்குவரத்து விதி!

சென்னை: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் சில சட்டங்களை மாற்றியும், கடுமையாக்கியும் வருகிறது. நாளை முதல் ( திங்கட்கிழமை) அபராத கட்டணம் உயர்த்தி கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அபராத கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

காதை பிளக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தி ஹாரன் அடித்தபடி செல்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகை வெளியேற்றி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை விதிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று 34 வகையான விதிமீறல்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 50 ரூபாய் இருந்த கட்டணம் தற்போது 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் 2-வது முறை சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் இதேபோன்று அபராதம் வசூலிக்கப்படும்.

சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் விதமாக வேகத்தில் ஓட்டிச்சென்றால், முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும். நம்பர் பிளேட் இல்லாமல் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு நாளை முதல் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். எப்படியோ போக்குவரத்து போலீசார் பிஸியாகி விடுவர்.

Thursday, January 19, 2012

சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் செயல்பாட்டுக்கு வந்தது

சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் ”சன்வே ப்ளூ லைட்” அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை ஒரு நொடியில் போடும் வல்லமை கொண்டது.
 
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்,  3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
 
கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Thursday, January 12, 2012

ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம்: இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு

சென்னை, ஜன.12-
 
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும்.
 
ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டியின் துணை தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.