இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, December 15, 2010

வாக்குவாதம் மற்றும் கோபம் …

வாக்குவாதம்
தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாம ரழி ஆதாரம்: திர்மதீ
அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழி ஆதாரம்: அபூதாவூத்
நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரழி ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழி ஆதாரம்: திர்மிதீ
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் ரழி அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் ரழி அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர்.
அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் ரழி அதாரம்: அபூதா

கோபம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்)
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி (புகாரி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்.
அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரழி (அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ”
அறிவிப்பாளர் : அபூதர் ரழி (மிஷ்காத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.”
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ”
அறிவிப்பாளர் : அனஸ் ரழி (மிஷ்காத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக்கூடாது.அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ”
அறிவிப்பாளர் : அனஸ் ரழி (மிஷ்காத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழி, (புகாரி)
நன்றி : Tamil ISLAM Group

No comments:

Post a Comment