இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, January 31, 2011

இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்' எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக புதிய, "இ-மெயில்' முகவரி ஒன்றையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலை, ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.

இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில், 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.


இதற்காக இவர்களது காலில், "எலக்ட்ரானிக் டேக்' எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இ-மெயில் முகவரி : டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக http://www.indianembassy.org/ என்ற இ-மெயில் முகவரியை, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, minca@indiagov.org மற்றும் edu@indiacgny.org என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி, இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.

நன்றி : தினமலர்

Saturday, January 29, 2011

மம்மி வேண்டாம்... டி.வி. போதும்! : அம்மாக்கள் அலர்ட்!

''மம்மிக்கு வேலை இருக்குடா பாப்பா... நீ சமத்தா டி.வி பார்த்துட்டு இருப்பியாம்... நான் வேலை முடிச்சுட்டு வந்துருவே னாம்!'' என்று தங்கள் செல்லங்களை டி.வி முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் சிறிது காலம் கழித்து, ''என் குழந்தை என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் நைநைன்னு அழுதுட்டே இருக்கு. டி.வி போட்டாதான் அழுகையை நிறுத்துறா!'' என்று புலம்புவார்கள்.

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், கார் டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம்.  
''அப்படியா?'' என்ற ஆச்சர்யத்துடன் குழந்தைகள் உளவியல் நிபுணர் தேவகியிடம் வினவினேன். ஒற்றை வார்த்தையில் 'ஆமாம் என்று ஆமோதித்தவர், இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று அலுப்பாக வீடு திரும்பும் இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுக்கே போதுமான நேரம் செலவிட முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரி என்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான  பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.
ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட் செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?
'அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்க என்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன். மகாபாரதம், ராமாய ணம், பஞ்ச தந்திரக் கதை கள், கார்டுன் போன்றவற்றை சி.டி -யில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தக் கதைகளைச் சொல்ல வேண்டும். பல்லாங் குழி, தாயம், தட்டாங்கல் போன்ற பாட்டிக் காலத்து விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.
தொடர் டி.வி பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. 'டி.வி பார்ப்பதைக் குறை! என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காது என்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'அம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரிடா! என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. 'தப்பு செய்தாலும், அம்மா மன்னித்துவிடுவாள்! என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டி லும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!''

THANKS : SIRKALI ABDUL AZIZ

ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது

புதுடில்லி :"ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். "மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல்' என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

இறுதியில், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. எங்களை பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும்.ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.

ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதை சட்ட விரோதமாகக் கருத முடியாது.பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே.இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

THANKS : DINAMALAR

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள்...

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர்.

மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந்திருக்கும் சில எழுத்துக்களை மட்டும் காட்டச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களை கம்ப்யூட்டர் திரையை இரு கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளச் சொன்னார்கள்.

அடுத்து அதையே முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண்டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்.

விளைவு, திரையை பின்னால் பிடித்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாணவர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட்டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவியல்படி நமக்கு கையருகே இருக்கும் பொருளைப் பற்றித்தான் நாம் அதிக நேரம் கவனிக்கிறோம்.

அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக்கிறோம். ஒரு வகையில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதால், முடிவெடுப்பதில் இடைஞ்சலாகவே உள்ளன.

அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்தனை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள். மனக்கற்பனை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனையிலிருந்து உறுதியாகிறது.
THANKS : TAMILCNN.COM


Wednesday, January 26, 2011

அடையாளத்தில் அர்த்தமில்லை - குடியரசு தினதினத்தைக் கொண்டாடும் வேளையில்...

தேசியக் கொடியை ஏற்றுவது என்பது எந்தவொரு நாட்டின் குடிமகனுக்கும் பெருமிதமான செயலாகத்தான் இருக்க முடியும். இந்துக்களுக்குப் பொங்கலும் தீபாவளியும்போல, இஸ்லாமியர்களுக்கு பக்ரீத்தும் ரமலானும்போல, கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டரும் கிறிஸ்துமஸýம் போல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சுதந்திர தினமும், குடியரசு தினமும் பண்டிகை நாளாக இருக்க வேண்டும் என்பதுதான், இந்திய சுதந்திரத்திற்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த தியாகிகளின் எதிர்பார்ப்பு.


62-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில், பாரதிய ஜனதாக் கட்சி ஒரு மிகப்பெரிய பிரச்னையைக் கிளப்ப முயற்சிக்கிறது. கொல்கத்தாவிலிருந்து கிளம்பி "பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' என்கிற அமைப்பின் சார்பில் ஒருமைப்பாடு யாத்திரை ஒன்று ஸ்ரீநகர் லால் செüக்கை நோக்கிப் பயணித்திருக்கிறது. குடியரசு தினத்தன்று ஜம்மு காஷ்மீரின் தலைநகரமான ஸ்ரீநகரின் மையப் பகுதியிலுள்ள லால் செüக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேச ஒற்றுமையை வலியுறுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்று இவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.


இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏற்ற முடியவேண்டும். தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமை ஏற்படுவதற்கு பதிலாகப் பிரிவினைவாதிகளின் கரம் வலுப்படுமானால், அது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக இருக்குமே தவிர, தேசப்பற்றாக இருக்க முடியாது.


"பார்த்தீர்களா, எங்களை இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி' என்று இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி தனது தேசப்பற்றைப் பறைசாற்றிக் கொள்ள இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறதே தவிர, காஷ்மீரில் ஒற்றுமையை ஏற்படுத்தித் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இது இருக்கப் போவதில்லை என்பதுதான் நிஜம்.


ஸ்ரீநகர் லால் சௌக்கில் அடையாளக் கொடியேற்றம் நடத்த ஆசைப்படுபவர்கள், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல அடையாளத்துக்காகக் கொடி ஏற்றும் வைபவம் ஸ்ரீநகரில் கடந்த 60 ஆண்டுகளாக அரசால் நடத்தப்பட்டு வருகிறதே, பிறகும் ஏன் காஷ்மீரப் பிரிவினைவாதிகளின் கொட்டம் அடங்கவில்லை? அவர்களுக்கான ஆதரவு குறையவில்லை? இதைப்பற்றி ஏன் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவதில்லை?


தெலங்கானாவில் நான்கு பஸ்களை எரித்துக் கலவரம் மூளுகின்ற சூழ்நிலை ஏற்படுவதற்குள், மத்திய உள்துறை அமைச்சர் தெலங்கானா மாநிலம் அமைப்பது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று பதறுகிறார். காஷ்மீரில் நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, நாம் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தோமா? பிரிவினை கேட்பவர்களாகவே இருந்தாலும், அவர்களை நாம் நமது இந்திய சகோதரர்களாக நினைக்கிறோமா, மதிக்கிறோமா?


சீனாவுக்குப் போக காஷ்மீரில் வாழ்பவர்கள் அனுமதிச் சீட்டுப் பெற தனியாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டால், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று குரலெழுப்பிக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஆனால், ஒரு காஷ்மீரி இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களைப்போல அவ்வளவு சுலபமாகப் பாஸ்போர்ட் பெற்றுவிட முடியாது என்பது தெரியுமா?


தெருவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலமாக வந்து கல்லெறிந்து பிரச்னை செய்தபோது, ராணுவம் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிலர் இறந்தனர். அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால், சோஃபியன் என்கிற ஊரில் இரண்டு அப்பாவிப் பெண்கள் ராணுவ அதிகாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார்களே, அதைப்பற்றி விசாரணை நடத்த முடியாது, அந்த ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது?


ஆந்திரத்தில் தெலங்கானா போராட்டத்துக்கும், ராஜஸ்தானில் குஜ்ஜர்கள் போராட்டத்துக்கும், அசாமில் போடோலாண்ட் போராட்டத்துக்கும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண விழையும் மத்திய அரசும், அதைப்பற்றி அக்கறையுடன் விவாதிக்கும் இந்தியப் பொதுமக்களும், நமது நாட்டின் பிரிக்க முடியாத பகுதி என்று சொந்தம் கொண்டாடும் காஷ்மீர மக்களின் பிரச்னைகளை மட்டும் விரோதத்துடன் பார்க்கிறோமே, பிறகு ஒற்றுமை எப்படி ஏற்படும்?


சர்வகட்சி தூதுக் குழு ஸ்ரீநகருக்குப் போய் கலவரத்தில் இறந்துபோன இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகுதான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவுடனும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் நேரடி ஆதரவுடனும் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் இப்போது சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். இதைத் தகர்ப்பதால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?


பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்தபோது, அன்றைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் செங்கோட்டையில் கொடியேற்றுவதற்குப் பதிலாக ஸ்ரீநகர் லால் செüக்கில் கொடியேற்றி இருந்திருக்கலாமே? ஒரு முறைகூட அப்படிச் செய்யவில்லையே, ஏன்?


இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் குடியரசு தினத்தன்று காஷ்மீர ஆளுநர் தேசியக் கொடியை வழக்கம்போல ஏற்றத்தான் போகிறார். அந்தக் கொடியேற்றும் விழாவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாக்காரர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே?


காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்கிற உணர்வு பெற வேண்டும். அவர்களுக்கு இந்திய அரசு தங்களையும் பிரஜைகளாகக் கருதுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களே மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு குதூகலமாக மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டு தேசிய கீதம் பாடினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். அதை விட்டுவிட்டு, ஏதோ அடையாளத்துக்குக் கொடியேற்றப் போகிறேன் என்று விதாண்டாவாதம் செய்தால், பிரிவினைவாதிகள் பாகிஸ்தானியக் கொடியை ஏற்றி நம்மைக் கேவலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இந்தியக் குடியரசின் ஐக்கியமும், ஒருமைப்பாடும் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டாக வேண்டும் என்பதில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல, பொறுப்பான ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அக்கறை உண்டு.

நன்றி : தினமணி

Tuesday, January 25, 2011

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி நம்மாழ்வார்

நெல்லை: பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளதாக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
நெல்லை ரோஸ் மேரி கல்வி நிறுவனங்கள் சார்பில் பூமி பாதுகாப்பு விழா கே.டி.சி. நகரில் நடந்தது. தாளாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இயக்குனர்கள் ஷெரின் அரவிந்த், ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது,
பூமித் தாயை காப்பாற்ற வேண்டிய கடைமை நம் அனைவருக்கும் உள்ளது. பூமி நலமாக இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். பூமி வெப்பமாதலுக்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் காரணமாகும். தட்பவெட்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் பூமி வெப்பமாகிறது.
பூமிக்கு மனிதனால் ஏற்படும் அழிவுகளால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக சத்துணவு கிடைக்காமல் கர்ப்பிணிகள், குழைந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மனித வாழ்க்கையில் சமத்துவம் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
இயற்கையை விட்டு விலகி வாழ்ந்து வருகிறோம். இதனால் மனிதன் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறான். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு பூமியை காப்பாற்ற வேண்டும்.
இயற்கை அழிவதை தடுக்க வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது. இதற்காக ஓய்வு நேரத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

நேர்மையான மாவட்ட ஆட்சியருக்கு நடந்த கொடுமை.

மாலேகான் : மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கூடுதல் கலெக்டர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே பெட்ரோல் பதுக்கல்காரர்கள் இடத்தில் திடீர் சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை 6 முதல் 7 பேர் தீவைத்துக் கொன்றனர்.
இந்த கொடூரச் செயலை பெட்ரோல் மற்றும் டீசல் பதுக்குபவர்கள் தான் செய்துள்ளனர். கலெக்டரை எரித்தவுடன் குற்றவாளிகள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மாலேகான். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த சோனாவானே ஏதோ சந்தேகத்தின் பேரில் அந்தப் பகுதியில் தனது காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். போலீஸ் பாதுகாப்பின்றி தனது உதவியாளருடன் திடீர் என்று சோதனை நடத்த வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மண்ணெண்ணெய் மாபியா கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை உயிரோடு எரித்துக் கொன்றது.

சோனாவானே கடமை தவறாத நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இந்த சம்பவம் குறி்த்து மஹாராஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் சவான் அதிர்ச்சி கலந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்தார்.
நன்றி : தட்ஸ்தமிழ்