இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, January 24, 2011

கட்சிகள் தரும் பிரியாணி, பணத்திற்கு ஆசைப்படாமல் வாக்களிக்க வேண்டும்

சென்னை: வாக்காளளர்கள், அரசியல் கட்சிகள் கொடுக்கும், பணம், பிரியாணி உள்ளிட்ட பொருட்களுக்கு ஆசைப்படாமல் தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட தினமான ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் இந்த தினத்தை நாளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வருகிற தேர்தலில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதாக அதிக அளவில் புகார்கள் வந்தன. இதை தடுக்க பீகார் மாநிலத்தில் புதிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. தமிழ்நாட்டிலும் அது போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்படும்.

இது தவிர பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வினியோகத்தை தடுக்க வீடியோ மூலமும் கண்காணித்து குற்றங்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர்களும், பிரியாணி, பணம் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆசைப்படாமல், தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் வங்கி கணக்கு மூலம் தான் செலவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். பினாமிகள் பெயரில் செலவு செய்வது கண்டு பிடிக்கப்பட்டாலும் அது வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

தமிழ்நாடு உள்பட சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கான புதிய தேர்தல் விதிமுறைகள் இன்னும் 15 நாட்களில் வெளியாகும். யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்காக அத்தாட்சி சீட்டு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுபற்றி பரிசீலித்து முடிவு செய்ய தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருத்தை கேட்டு தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். தற்போது பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தப்படுகிறது.

அனைத்து சாவடிகளிலும் இதை பொருத்த வசதி இல்லை என்றாலும் முடிந்தவரை கேமிரா பயன்படுத்தப்படும். 69 பேருக்கு மேல் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பிரச்சினை உள்ள தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டு மூலம் தான் தேர்தல் நடத்த முடியும்.

கடந்த தேர்தலின் போது நடந்த முறைகேடு தொடர்பாக 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் மீது இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக மேல்-சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டன. தேர்தல் கமிஷன் தேதி அறிவித்தால் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தேர்தல் நடத்த தயார் என்றார் அவர்.

THANKS : THATSTAMIL

No comments:

Post a Comment