இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, January 25, 2011

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி நம்மாழ்வார்

நெல்லை: பூமியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளதாக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
நெல்லை ரோஸ் மேரி கல்வி நிறுவனங்கள் சார்பில் பூமி பாதுகாப்பு விழா கே.டி.சி. நகரில் நடந்தது. தாளாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இயக்குனர்கள் ஷெரின் அரவிந்த், ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது,
பூமித் தாயை காப்பாற்ற வேண்டிய கடைமை நம் அனைவருக்கும் உள்ளது. பூமி நலமாக இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். பூமி வெப்பமாதலுக்கு காடுகள் அழிக்கப்படுவதுதான் காரணமாகும். தட்பவெட்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் பூமி வெப்பமாகிறது.
பூமிக்கு மனிதனால் ஏற்படும் அழிவுகளால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக சத்துணவு கிடைக்காமல் கர்ப்பிணிகள், குழைந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மனித வாழ்க்கையில் சமத்துவம் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
இயற்கையை விட்டு விலகி வாழ்ந்து வருகிறோம். இதனால் மனிதன் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறான். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு பூமியை காப்பாற்ற வேண்டும்.
இயற்கை அழிவதை தடுக்க வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது. இதற்காக ஓய்வு நேரத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment