இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, June 20, 2011

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை

கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் நான்கு பள்ளிகள் உட்பட பல பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்தக் கோரி, 6,355 தனியார் பள்ளிகள், ரவிராஜபாண்டியன் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன. இந்தப் பள்ளிகளுக்கு கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் புதிய கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, பெற்றோர் அமைப்புகளும், பெற்றோர்களும் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளிகள் திறந்து சில தினங்கள் கடந்த நிலையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது, அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல பள்ளிகளில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிப்பதால், கல்வித் துறைக்கு தலைவலியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: குழு நிர்ணயித்த கட்டணத்தை விட பல பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களுக்கு உட்பட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். சென்னையில் நான்கு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது குறித்த புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

THANKS : DINAMLAR

No comments:

Post a Comment