இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, July 02, 2011

இறையச்சமுள்ள ஒழுக்கமான பெண்கள் மீதுஅவதூறு கூறுதல்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6857
ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுக்க நினைப்போர் அவள் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டால் போதுமானது. அன்று முதல் அவள் நிம்மதி அனைத்தும் அடியோடு அழிந்து விடும்.

இவர்கள் இவ்வாறு பேசுவது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை உணரவில்லை போலும்!

''உங்களுக்கு (திட்டமாக அறிவில்லாத) ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்களா? இன்னும் நீங்கள் இதை இலேசானதாகவும் எண்ணிவிட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ் விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கிறது.'' (அல்குர்ஆன் 24:15)

''கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறியவர்கள் (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.'' (அல்குர்ஆன் 24:4)

அவதூறு கூறி பூமியில் குழப்பங்களை உண்டாக்கி அநியாயம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்காகவும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காகவும் இறைவன் இச்சட்டத்தை மனித சமுதாயத்திற்குப் பெரும் பரிசாகக் கொடுத்துள்ளான்.

இச்சட்டம் கடுமையான சட்டமாக இருப்பதால் இதைச் சற்று விரிவாகவே நாம் காண்போம்!

திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

''விபச்சாரம் புரிந்த பெண், விபச்சாரம் புரிந்த ஆண் ஆகிய இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.'' (அல்குர்ஆன் 24.2)

அவதூறு கூறுபவர்களுக்கு எண்பது கசையடி என்று இறைச்சட்டம் இருப்பதால் பொய் சாட்சி சொல்வதற்கு எவரும் துணிய மாட்டார். அப்படியே துணிந்து நான்கு பேர் பொய் சாட்சி கூறிவிட்டாலும் நிச்சயம் அவர்கள் உலகிலேயே ஒருநாள் பிடிபடுவார்கள்.

எப்படி என்றால், கெட்டவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவே முடியாது; என்றாவது ஒருநாள் பிரச்சினை வந்து தான் தீரும். அன்று அவர்கள் பிரிந்து விடுவார்கள். அவர்கள் இவ்வாறு இந்த விஷயத்தில் பொய் சாட்சி கூறியிருந்தால் பிரிந்த பின்பு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போது உண்மை வெளியாகி விடும்; அன்று அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அவதூறு கூறியவர்களுடைய சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மற்றொரு சட்டமும் 24:4 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதூறு கூறியவர்களுக்குத் தண்டனை கொடுத்து விட்டால், அதைக் காண்போர் மற்றவர் மீது அவதூறு கூறமாட்டார்கள். அநியாயம் எவ்விதத்திலும் ஏற்படாது.

அன்னியப் பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள், அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். தன் மனைவியின் மீது ஒருவன் களங்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்பதையும் நாம் காண வேண்டும்.

தன் மனைவி மீது அவதூறு கூறும் ஒருவன், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. அவளுக்குத் தக்க தீர்ப்பை வழங்கி விடலாம். தன் மனைவியைத் தவறான செயலில் கண்ட ஒருவன் சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்கவில்லை என்ற காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் அது நியாயமாகாது; அல்லது அவன் கொண்டு வரும் வழக்கைச் சாட்சிகள் இல்லை என்ற காரணத்திற்காக நிராகரித்தாலும் நியாயமில்லை. ஏனெனில் இவ்வாறு நிராகரித்து அவனைத் தன் மனைவியுடன் வாழச் செய்வதால் பல தீய விளைவுகள் உண்டாகும் சாத்தியங்கள் உள்ளன.

''எவர்கள் தங்கள் மனைவிமார்கள் மீது அவதூறு கூறி(அதை நிரூபிக்க) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமல் இருந்தால், அவன் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து ஐந்தாவது முறை (இதில்) நான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்றும் (அவன் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:6-7)

இவ்வாறு அவன் சத்தியம் செய்து கூறியவுடன் அவன் சொல்வது உண்மை என்று தீர்ப்பளித்து விட முடியாது. அவனுடைய மனைவியிடமும், அவ்வாறே சத்தியம் செய்யக் கட்டளையிட வேண்டும்.

''இன்னும் (அவனுடைய மனைவி) தன் மீதுள்ள தண்டனையை விலக்க அவன் கூறிய குற்றத்தை மறுத்து ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி ஐந்தாவது முறை அவன் உண்மையாளர்களில் உள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:8-9)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பாவங்கள் மட்டுமல்லாமல், எவை எல்லாம் பாவமோ அவை அனைத்தையும் விட்டு அல்லாஹ் மனிதர்களைக் காத்து நேர்வழியில் செலுத்துவானாக. அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அருள்புரிவானாக.

No comments:

Post a Comment