இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, March 23, 2011

பேரிக்காயைவிட ஆப்பிள் ஆபத்து!

- அதிர்ச்சி தரும் தொப்பை ரிப்போர்ட்!

'தொப்பை இருந்தால் பணம் கொட்டும் என்று கிராமப் புறங்களில் பேசுவார்கள். அது உண்மையோ இல்லையோ, தொப்பை இருந்தால், மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் என்பது மட்டும் 100 சதவிகிதம் மருத்துவ நிஜம்! 
தொப்பையிலும் இரு வகை உண்டு. பார்க்க ஆப்பிள் பழ வடிவத்தில் சிலருக்கும், பேரிக்காய் வடிவத்தில் சிலருக்கும் இருக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு பேரிக்காய் வடிவத்தில் இருக்கும். இரண்டு தொப்பைகளுமே பிரச்னையானதுதான் என்றாலும், பேரிக்காய் வடிவத்தைக் காட்டிலும், ஆப்பிள் வடிவத் தொப்பை கூடுதல் ஆபத்தானது. இந்த வகைத் தொப்பை கொண்டவர்களுக்கு, மற்றவர்களைவிட ஹார்ட் அட்டாக் வர மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரபல இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சத்திடம் பேசினோம், ''முன்பு இதய நோய் வருவதற்கான காரணங்களாகப் புகை பிடிப்பது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுவோம்.
உடல் பருமன் என்பது புதியது அல்ல. இப்போது இதிலேயே நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களாக மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று ஒன்றைக் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாதிப்பு ஆசிய நாட்டவர்களுக்குத்தான் அதிகமாம்.  நல்ல கொலஸ்ட்ரால், மொத்த கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால், டிரை கிளசரைட் என்று கொழுப்பை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் ஆசிய மக்களுக்கு நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும், டிரை கிளசரைட் அதிகமாகவும் இருக்கிறது என்பது கண்டுபிடிப்பு. ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவு சராசரியாக 40 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு பெரும்பாலும் இதற்குக் குறைவாகவே உள்ளது.
அதேபோன்று, வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் எடுத்துப்பார்த்தால், சர்க்கரை அளவு 110 என்று இருக்க வேண்டும். ஆனால், நம் உடலில் 110-க்கு அதிகமாக இருக்கிறது.
இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ., பெண்களுக்கு 80 செ.மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஓர் அறிகுறி இருந்தாலும், அவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளது என்று கூறுவோம்.
சரி, 'உடல் பருமனாக உள்ள எல்லோருக்கும் மாரடைப்பு வரவேண்டுமே ஏன் சிலருக்கு வருவதில்லை? என்று கேட்கலாம். அப்போதுதான் ஆப்பிள் ஷேப், பியர் ஷேப் (பேரிக்காய்) என்பதைக் கண்டுபிடித்தார்கள். இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி பருத்திருப்பதை பியர் ஷேப் என்பார்கள். வயிறு பருத்திருப்பதை ஆப்பிள் ஷேப் என்பார்கள். பியர் ஷேப் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதயப் பிரச்னை வருவது குறைவு. ஆனால், ஆப்பிள் ஷேப் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு இதய நோய் வருவதற்கான ரிஸ்க் அதிகம்!
ஜப்பானின் சுமோ வீரர்களுக்கு வயிறு பெரிதாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு இந்தியர்களைவிட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால், சுமோ வீரர்களுக்கு தோலின் அடியில்தான் கொழுப்பு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கோ வயிறைச் சுற்றியே அதிக அளவில் கொழுப்பு உள்ளது. இது ஆபத்தானது.
'இன்டர்ஹார்ட் ஸ்டெடி என்று ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் புகைபிடிப்பது, நீரிழிவு, உயர் ரத்த
அழுத்தம், உடல்பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஐந்து அபாயக் காரணிகளுடன் இன்னும் சிலவற்றைச் சேர்த்துள்ளனர். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, போதுமான காய்கறி - பழங்களை எடுத்துக்கொள்ளாதது, வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஆகியவைதான் அது.
நான் படிக்கும் காலத்தில், தினமும் விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்கு வருவோம். ஆனால், இன்று பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை.  உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்வதும், அதிகமாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதும் அதிகரித்துவிட்டது. இதனால் உடலில் அதிகம் கொழுப்பு சேர்கிறது.
உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது சிம்பிள். சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.
உடலில் கொழுப்பு கூடாமல் இருக்க அல்லது கூடியிருக்கும் கொழுப்பைக் குறைக்க மூன்றே மூன்று விஷயங்கள் செய்தால் போதும். தினமும் ஆறு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்காகச் செலவிட வேண்டும். தினமும் 150 முதல் 250 கிராம் அளவு காய்கறியையும், அதே அளவு பழங்களையும் சாப்பிட வேண்டும்.
இது தவிர, கார்போஹைட்ரேட் (சர்க்கரை) சத்து குறைவாக எடுத்துக் கொண்டால், உடல் எடையைக் குறைத்து கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்!'' என்கிறார் டாக்டர் சிவகடாட்சம்.
இத்தனை எளிதுதானா 'சிக் உடல் பெறுவது?
THANKS - பா.பிரவீன்குமார்

No comments:

Post a Comment