இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, April 18, 2011

கல்வித்துறையில் கவனம் தேவை

நாகரிகமான, அறிவுத்திறன் சார்ந்த சமுதாயம் அமைய கல்வியே அடிப்படை. கல்வித்துறைக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம், தீட்டும் திட்டங்கள் வருங்கால சமுதாயத்தை நல்ல வழியில் இட்டுச் செல்லும். அந்தவகையில், அடுத்து அமையவுள்ள அரசு, கல்வித்துறைக்கு செய்ய வேண்டிய முக்கிய பணிகளை விவரிக்கிறார், "பொதுப் பள்ளிக்கான மாநில மேடை'யின் பொதுச் செயலர் பு.பா.கஜேந்திரபாபு.

கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என அரசு இரண்டாக பிரித்து திட்டங்களை தீட்டி வருகிறது. இதில் அடிப்படை விஷயமாக தொடக்கப் பள்ளி கல்வி அமைகிறது. தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் அரசு நியமிக்கிறது. ஆனால், ஒரு பள்ளியில், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் இருக்கும்போது, இதில் படிக்கும் 250 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் தான். இந்நிலையில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது, 250 மாணவர்களுக்கு ஒருவர் என்று மாறுகிறது. எனவே, வகுப்புவாரியாக உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பள்ளிகள் சுகாதார வசதி, கற்றல் சூழல் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக உருவாக்க வேண்டும். இதன்மூலமே, பெற்றோரே விரும்பி, குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர். 10 வயதுக்கு உட்பட்ட மாணவனுக்கு இசை, ஓவியம், கைத்தொழில் போன்றவற்றையும் சேர்த்து கற்பித்தல் வேண்டும். இதற்கு, தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர் என்ற ஒருவரே இல்லை. உடற்பயிற்சி ஆசிரியரை நியமித்தால்தான், இளம் வயதிலிருந்து மாணவனுக்கு உடற்பயிற்சியோடு, விளையாட்டையும் கற்றுக் கொடுக்க முடியும். விளையாட்டை முறையாக போதிப்பதோடு, ஆர்வத்தையும் தூண்ட முடியும்.

"புத்தகப் பூங்கொத்து' என்று முறையை தொடக்கப் பள்ளிகளில் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், புத்தகங்களை வகுப்பறைகளில், கொத்தாக தொங்கவிட்டு, அதில் ஒன்றை அவனே தேர்வு செய்து படிக்க விடுகின்றனர். இதற்கு பதில், பள்ளிகளில் நூலகங்களைத் தொடங்கி, அதற்கு உதவியாளர் ஒருவரையும் நியமிப்பது சிறந்ததாக இருக்கும்."தேசிய கல்வித் திட்டம் 2005' மூலம், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் உதவியாளனாக மாறவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நமது கல்வி, "வங்கி முறைக் கல்வியாக' இருக்கிறது. இதில், "ஆசிரியரிடம் உள்ள அறிவை' மாணவனுக்கு மாற்றம் செய்கின்றனர். இதற்கு பதில், "வகுப்பறையில் மாணவனை பார்வையாளனாக வைத்திருக்காமல், பங்கேற்பாளனாக' மாற்றவேண்டும்.

"தேசிய பாடத் திட்டம்' மூலம், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் விரிவாக்கம். செய்முறைத் தேர்வுக்கு மாணவனை உட்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வகங்கள் அவசியம். மேலும், செய்முறைத் தேர்வை மாணவன் தனியாகச் செய்ய, அவனை தயார் செய்ய பயிற்சி அளிக்க வேண்டும்.அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்வித் திட்டம் குறித்து தவறான பரப்புரைகளை செய்து வருகின்றனர். இதை அரசு தடுத்து நிறுத்துவதோடு, இத்திட்டத்தில் பயிலும் மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் தடுத்து தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும். உயர்நிலை பள்ளிகளில் மொழி ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் தான் மொழிப் பாடங்களை கற்பிக்க வேண்டும். அப்போது, அடிப்படை இலக்கணத்தை முறையாக கற்பிக்க முடியும்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்கிறது. இதற்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.பொதுப் பாடத் திட்டம் மூலம், உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு, "புராஜக்ட்' தயார் செய்து சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதுன்மூலம் தான், உற்பத்திக்கு தேவையான மனித உழைப்பை தயார் செய்வதைத் தவிர்த்து, சமூக நோக்குடைய மனித சக்தியை உருவாக்க முடியும்.
மேல்நிலைப் பள்ளியில், "சிறப்புத் தமிழ்' என்ற பாடம், தமிழகத்திலேயே ஒரு பள்ளியில் மட்டும் தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் மேல்நிலைப் பள்ளிகளில் இல்லை. எனவே, தமிழ் ஆசிரியர்கள் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும்.இதனால், பி.ஏ., தமிழ் படிப்பை தேர்வு செய்பவர்கள் பெரும்பாலும், வணிகவியல் போன்ற பிற பாடங்களைப் படித்தவர்களாக உள்ளனர். எனவே, "சிறப்புத் தமிழ்' பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கவேண்டும். மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் முறையை மாற்றவேண்டும்.

பு.பா.கஜேந்திரபாபு, பொதுச் செயலர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

THANKS : DINAMALAR

No comments:

Post a Comment