இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, April 27, 2011

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…? PART - 2

இவ்வாறு இருக்க வரலாறுகளைப் புரட்டினால் முஸ்லிம்கள் தீவிரவாதமோ, பயங்கரவாதமோ செய்ததற்கான எந்தத் தடயங்களையும் நம்மால் காண முடியவில்லை. தன் வாழ்நாள் முழுக்க இந்து பக்தராக இருந்த, நிமிடத்திற்கு ஒருமுறை “ஹே ராம்” என்று முழங்கிய காந்திஜியைக் கொன்றொழித்த பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குப் பங்கில்லை. ஆனால் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பல இன மக்களும் வாழும் இந்தியாவில் ஒற்றுமை தழைத்தோங்க ஓங்கிக் குரல் கொடுத்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வாரிசான இந்திரா காந்தியைச் சுட்டுப் பொசுக்கிய தீவிரவாத்தில் முஸ்லிம்களைக் காண முடியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் தீவிரவாதிகள்!

இந்திரா கந்தியின் புதல்வரும் இளைய தலைமுறையின் இதயத்தில் வாழ்ந்து தனது இளம் வயதில் இந்தியாவின் பிரதமரான ராஜீவ் காந்தியை வெடித்துச் சிதற வைத்து சின்னா பின்னமாக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களின் அடையாளச் சின்னங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்துத் தாக்கியதில் எந்த முஸ்லிமுக்கும் தொடர்பில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைகளிலும், கூட்டுக் கற்பழிப்புகளிலும் முஸ்லிமகளுக்குப் பங்கில்லை. ஆனால் முஸ்லிம்கள் அதி பயங்கரவாதிகள்!

இவர்கள்  தங்கள் சமூகம் அழிவுக்குள்ளாக்கப்படும்போதும், மனித சமூகத்தின் மானங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படும்போதும் உணர்வை இழக்காமல் உரிமை கேட்டார்கள். அதனால் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். இதன் விளைவு பல ஆயிரம் முஸ்லிம்களின் உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டன. பச்சிளம் குழந்தைகளின் அழகு மேனிகளோ தீக்கிரையாக்கப்பட்டு கரிக் கட்டையாயின.

இவை அனைத்தும் அரங்கேறிய பிறகும் நீதி கிடைத்ததா? இல்லையே. சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். ஆனால் நீதி யாருக்கு?

சங்கர ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு கழிவறை செல்ல வாழை இலை கொடுக்கிறது காவல்துறை. அவரது வழக்கிற்காக விடுமுறை நாளிலும் நீதிமன்றக் கதவுகள் திறந்தன.

அதே நேரத்தில் கோவை வெடிகுண்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதானி ஒன்பதரை வருடங்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பிறகு நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகளால் ஒரு காலை இழந்த மதானி, சிறையில் இருந்தேபோது தனது கட்டைக்கால் பழுதடைந்து விட்டது, அதற்காக சிகிச்சை எடுக்க மருத்துவமனை செல்ல ஜாமீன் வேண்டும் என்று கேட்ட பொழுது அனைத்து நீதிமன்றக் கதவுகளும் இறுக மூடிக்கொண்டதே.. ஏன்? இதுதான் சம நீதியோ?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் கடும் சிறைவாசம். ஆனால் கோவை குண்டுவெடிப்பிற்குக் காரணமாக அமைந்த 19 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லபட்ட கலவர வழக்கில் சம்பந்தபட்ட ஃபாசிஸ்டுகள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லையே ஏன்?

மலேகான், அஜ்மீர், புனே, கோவா, ஹைதராபாத் என்று இந்தியாவில் நடந்த அநேக குண்டு வெடிப்புகளுக்குக் காரணமானது அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் ஆகிய தீவிரவாத இயக்கங்கள்தான் என்றும், அதனைத் துடிப்போடு இயக்கிக் கொண்டிருப்பது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புதான் என்றும் அனைத்து ஆதாரங்களும் தெளிவாக கையில் இருந்தும் இன்னும் இந்தத் தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது தடை செய்யவோ அரசாங்கம் தாயாராக இல்லையே ஏன்?.

பாபரி மஸ்ஜித் வழக்கின் உண்மை நிலையைக் கண்டறிய 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி, பல லட்சங்கள் செலவு செய்து, 1000 பக்கங்களுக்கு மேல் அறிக்கை தயார் செய்து அதில் அத்வானி, வாஜ்பாயி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள்தான் காரணம் என ஆதரத்துடன் அளிக்கப்பட்ட லிபரஹான் கமிஷனின் அறிக்கை இன்று எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறது என்று தெரியவில்லை.

இது போன்று தவறு செய்துவிட்டு தண்டனை அனுபவிக்காமல் சுதந்திரமாக குற்றவாளிகள் சுற்றித் திரிவதால் அரசாங்கத்திலும், அரசியலிலும், அதிகாரத்திலும் முஸ்லிம் சமூகம் தனது முத்திரைகளைப் பதித்து, இழந்த உரிமைகளை மீட்கப் போராடி வருகிறது. ஆனால் அது எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளையும் அடியோடு அழித்துவிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினர்.

அதற்காக அவர்கள் பயன்படுத்தும் மந்திரம்தான் இஸ்லாமிய தீவிரவாதம். இந்த ஃபாசிஸ்டுகளின் மந்திரத்தை உடைத்தெறிந்து உரிமைகளை மீட்க சமூகத்தை ஒன்றிணைக்க பாடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள் பயங்கரவாதச் சாயம் பூசப்பட்டு தடை செய்யப்படுகின்றன. அவ்வியக்கங்களை வீரியமாக வழி நடத்தும் தலைவர்களோ கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத சட்டங்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் சமீபத்தில் கேரளாவில் முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது நபியை இழிவு படுத்திய பேராசிரியரின் கை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டப்பட்டது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இயக்கம்தான் செய்தது என்று கூறி எந்த ஆதாரமும் இல்லாமல் அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

அதோடு மட்டுமல்லாமல் அதன் அரசியல் ஆதரவு பெற்ற கட்சியான SDPI-யைச் சேர்ந்த தலைவர்கள், ஆதரவாளர்கள் பலரை விசாரணை என்ற போர்வையில் பலி வாங்கியது கேரள கம்யூனிஸ்டு அரசு.
காரணம், சமீப காலத்தில் இந்த பாப்புலர் ஃப்ரண்ட் என்ற இயக்கம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் அதன் அரசியல் பிரிவான SDPI தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து ஆதிக்க சக்திகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.

ஆதலால் தீவிரவாதிகள் வரிசையில் இவர்களையும் இணைத்து இவர்களுடைய முயற்சிகளை முறியடித்து தடை செய்ய போட்ட நாடகம் பலிக்கவில்லை. காரணம் இந்தியா முழுவதும் இருந்த அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பினார்கள். இது ஃபாசிஸ்டுகளை நிலைகுலையச் செய்தது. இதே நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது பணியை வீரியத்தோடு தொடர்ந்தது. SDPIயோ சமீபத்தில் நடந்த தேர்தலில் களமிறங்கி தனது வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

இந்தச் சூழலில் ஃபாசிஸ்டுகள் தங்களின் சதி பலிக்காததால் தங்களது தில்லுமுல்லு வேலைகளைத் தொடங்கி இருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை கேராளாவின் ஒற்றப்பாலம் பகுதியின் SDPI மண்டலத் தலைவர் மரைக்காயர் (40) என்பவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. இப்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போன்ற மதத் துவேஷத்தை ஏற்படுத்தி அதில் இரத்த ஆறை ஓடச் செய்து குளிர்காயும் ஃபாசிசக் கும்பலைக் கைது செய்யுமா காவல்துறை? எத்தனை முறை அலைக்கழிக்கப்ப்ட்டாலும் முஸ்லிம் சமூகம் நீதிக்காக நீதிமன்றத்தை நோக்கிக் காத்திருக்கிறது.

கை வெட்டு சம்பவத்தில் காண்பித்த அக்கறையையும், ஆர்வத்தையும், முனைப்பையும்  இந்தக் கொலை முயற்சி வழக்கிலும் காட்டுமா கேரள காவல்துறை?

பொறுத்திருந்து பார்ப்போம். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்; நீதியும் ஒன்றாகும் காலம் வருமா? காத்திருப்போம்.

புதுவலசை ஃபைஸல்

No comments:

Post a Comment