இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, April 04, 2011

பிறர் குறைகளை மறைப்பவர்


உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங் குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கவுரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.
 
இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர் இழிவான, கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடுவதிலிருந்து மிகவும் வெட்கி விலகியிருப்பார். நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிறரது அந்தரங்கத்தில் தலையிடாமைஎன்ற பண்பை ஏற்று பாவங்களை பகிரங்கப்படுத்துவதிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வார். தன்னுடைய பாவத்தையும் அல்லது பிறரின் பாவத்தையும் அதை அவரே பார்த்திருந்தாலும் சரியே அல்லது பிறர் கூற கேட்டிருந்தாலும் சரியே, அதை வெளிப்படுத்தக்கூடாது.
மனிதனின் பலவீனங்கள் என்ற நோய்களுக்கான மருந்தாகிறது அவர்களது குறைகளை ஆய்வுசெய்து அதை பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவதல்ல. இது எவ்வகையிலும் நிவாரணமாகாது. உண்மை நிவாரணம் என்னவெனில், இம்மனிதர்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்து, நன்மைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தீய செயல்களின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஊட்ட வேண்டும். சண்டை, சச்சரவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது. நேசமும் மென்மையும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளால்தான் மூடிய இதயங்களைத் திறந்து, தூய்மைப்படுத்த முடியும். இதனால்தான் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தேடித்துருவி ஆராய வேண்டாமென இஸ்லாம் தடை செய்துள்ளது.

No comments:

Post a Comment