இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, May 29, 2011

புகையிலையால் விளையும் தீங்கு: பாக்கெட்டுகளின் மீது புதிய படங்கள்!

புகையிலையால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் விதமாக, புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில், புதிய எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படும்  என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பீடி, சிகரெட், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துவதோடு புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதுவரை புகையிலை பொருள் பாக்கெட்டுகளில் தேள், சேதம் அடைந்த நுரையீரல் போன்ற படங்கள் அச்சிடப்படு வருகின்றன. சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களுடன் சேதம் அடைந்த நுரையீரல் படம் அச்சிடப்படுகிறது.

வாய் புற்று நோய்க்கு புகையிலை பொருட்களை சுவைப்பதுதான் முக்கிய காரணம் என்று  இந்தியாவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். புகை பிடிப்பதை விடவும், புகையிலை பொருட்களை அப்படியே சுவைப்பதுதான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளின் மீது கடுமையான எச்சரிக்கை படங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது புதிய வாய் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய் ஆகியவை பற்றிய படங்கள் இடம் பெறும் என்று சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது படங்கள் அச்சிடப்படுவது மாற்றப்பட்டு வந்தது. புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எச்சரிக்கை படங்களை மாற்றுவது என அரசு தீர்மானித்து உள்ளது.

No comments:

Post a Comment