இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, May 18, 2011

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு....

நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்கவில்லையெனில், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது. எப்பொழுதாவது தூக்கம் வராமல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொடர்ந்து தூக்கம் வராமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத்தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதியை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. 
மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தி, பலவிதமான ஹார்மோன்களையும் என்சைம்களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற மின் அலைகள் நமது தூக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றில் ஆல்பா அலைகள் அமைதியான, ஆழ்ந்த தூக்கத்திற்கு பேருதவி புரிகின்றன. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றின் மூலமாக இந்த அலைகளை ஒருநிலைப்படுத்த முடியும். தூக்கத்தை தருவதற்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஆண்மைக்குறைவு, கை, கால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி மற்றும் கடும் சோர்வு ஆகியவை உண்டாவதால் அவற்றை தவிர்த்து, யோகாவில் கவனம் செலுத்துவது நல்லது.

நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்பு, மனச்சோர்வு, கண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, கண் சிவப்பு, கோபம், கை, கால் நடுக்கம், தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, கொட்டாவி, கண், மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சி, உச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வு, கண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி, கன்னங்கள் ஒட்டிப் போதல், அல்சர், தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டா கின்றன. உடல் மற்றும் மனதை குளிர்ச்சிப்படுத்தி, மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி, தூக்கத்தை உண்டாக்கும் அற்புத மூலிகை மருவு. ஓரிகானம் மேஜரேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தை சார்ந்த மருவு செடிகள் விவசாயப் பயிராகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள நறுமண எண்ணெய், சாபினின், கார்வக்ரால் மற்றும் பல டெர்பின்கள், பிளேவனாய்டுகள் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குவதுடன், மன இறுக்கத்தையும் குறைக்கின்றன.

மருவு இலை மற்றும் சிறு பூக்களை ஒரு துணியில் முடிந்து, தலையணை போல் வைத்து உறங்க தூக்கம் உண்டாகும். அது மட்டுமின்றி அறை முழுவதும் நறுமணம் வீசும். மருவு இலைகளை இடித்து, சாறெடுத்து, சம அளவு நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து, குளித்து வர இரவில் நன்கு தூக்கம் உண்டாகும். தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் மருவு இலைகளை ஊற வைத்து மாலையில் தலையில் தேய்த்து வந்தாலும் தூக்கம் உண்டாகும்.

வாயுக்களைஅடக்கலாமா?: அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், பெருமூச்சு, தூக்கம், வாந்தி, கண்ணீர், காம இச்சை மற்றும் சுவாசம் ஆகிய பதினான்கும் உடலின் இயல்பான வேகங்கள் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இவற்றை அடக்குவதால் நோய்கள் உண்டாகும். அபான வாயுவை அடக்குவதால் மார்பு வலி, வயிற்றுவலி, உடலில் குத்தல், மலம், சிறுநீர் தடை, பசி மந்தம் உண்டாகும். தும்மலை அடக்குவதால் தலைவலி, முகம் கோணல், இடுப்புவலி உண்டாகும். சிறுநீரை அடக்குவதால் நீரடைப்பு, நீர்த்தாரை புண், உறுப்பு சோர்வு உண்டாகும். மலத்தை அடக்குவதால் முழங்கால் வலி, கபம், தலைவலி, உடல் பலகீனம் உண்டாகும். கொட்டாவியை அடக்கினால் முகவாட்டம், செரியாமை மற்றும் புத்தி மங்கல் ஏற்படும். பசி மற்றும் தாகத்தை அடக்கினால் உடல் முழுவதும் குத்தல், உடல் இளைத்தல், முகச்சோர்வு மற்றும் மூட்டு வலி உண்டாகும்.இருமல் மற்றும் பெருமூச்சினை அடக்கினால் மூச்சில் துர்நாற்றம், இதய நோய், வயிற்றுப் புண்கள், மயக்கம் மற்றும் நடுக்கம் உண்டாகும். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, கண் சிவப்பு, செவிட்டுத்தன்மை உண்டாகும். வாந்தியை அடக்கினால் தோலில் தடிப்பு, கண் நோய், இருமல் உண்டாகும். கண்ணீரை அடக்கினால் மார்பு வலி, பீனிசம், ரோமக்கால்களில் புண்கள், அல்சர் உண்டாகும். காம இச்சையை அடக்கினால் திடீர் சுரம், மூட்டுகளில் வீக்கம், இரவில் இந்திரியம் வெளியேறுதல் ஆகியனவும், மூச்சை அடக்கினால் இருமல், சுவையின்மை, வெட்டை என்னும் உடல்சூடு ஆகியன ஏற்படுமென சித்த மருத்துவ நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.

No comments:

Post a Comment