இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Friday, March 02, 2012

போதையில் வண்டி ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்; 4 ஆண்டு சிறை

புதுடில்லி: குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், குறைந்தபட்சம் 2,000 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், மேலும், ஆறு மாதங்களில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, இனி கடுமையான அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும். தற்போதுள்ளதை விட, ஐந்து மடங்கு அதிக தண்டனை விதிக்கப்படவுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், குறைந்தபட்சம் 2,000 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஆறு மாதங்களில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரிடம் நடத்தப்படும் பரிசோதனையில், அவரது 100 மி.லி., ரத்தத்தில், 30 மி.கிராம் வரை ஆல்கஹால் கலந்திருந்தால், அது குற்றக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 30லிருந்து 60 மி.கிராம் வரை ஆல்கஹால் கலந்திருந்தால், ஆறு மாத சிறைத் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதிகபட்சமாக, 100 மி.லி., ரத்தத்தில், 150 மி.கிராம் ஆல்கஹால் கலந்திருந்தால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால், அவருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல், விபத்தில் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரிக்கும் வகையிலும், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டால், 1 லட்சம் ரூபாயும், கடுமையான காயம் அடைந்தால், 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment