இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, December 10, 2011

உத்தேச அட்டவணை வெளியீடு: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடக்கம்

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி முடிவடைகிறது. இதற்கான உத்தேச அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிடுவதற்கு முன்பாக உத்தேசமான அட்டவணையை அரசின் ஒப்புதலுக்கு தயாரித்து அனுப்புவது வழக்கம்.
 
அந்த வகையில் பிளஸ்-2 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை தற்போது அனுப்பியுள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம்
2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. 7 லட்சத்து
63 ஆயிரத்து 124 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர். கடந்த வர டத்தை காட்டிலும் 39,579 பேர் கூடுதலாக தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒவ்வொரு தேர்விற்கும் 2 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த இடைவெளியை கொடுத்துள்ளது. 0.25 கட்- ஆப் மார்க்கில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 2 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
 
தேர்வுத்துறை தயாரிக்கும் உத்தேச கால அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதே அட்டவணையை வெளியிட அரசு முடிவு செய்யும். அதனால் இந்த உத்தேச அட்டவணைக்கு ஒப்புதல் அளித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
 
THANKS : MAALAIMALAR

Friday, December 09, 2011

2012: மத்திய அரசு பொதுவிடுமுறை நாட்கள்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2012 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:

1. ஜனவரி 26 (வியாழன்)   குடியரசு தினம்
2. பிப்ரவரி 5 (ஞாயிறு)   மிலாடி நபி

3. ஏப்ரல் 5 (வியாழன்)   மகாவீர் ஜெயந்தி

4. ஏப்ரல் 6 (வெள்ளி)   புனித வெள்ளி

5. ஏப்ரல் 13 (வெள்ளி)   விஷு தினம்

6. மே 6 (ஞாயிறு)   புத்த பூர்ணிமா

7. ஆகஸ்ட் 15 (புதன்)   சுதந்திர தினம்

8. ஆகஸ்ட் 20 (திங்கள்)   ரம்ஜான்

9. செப்டம்பர் 19 (புதன்)   விநாயகர் சதுர்த்தி

10. அக்டோபர் 2 (செவ்வாய்)   காந்தி ஜெயந்தி

11. அக்டோபர் 23 (செவ்வாய்)   மகா நவமி

12. அக்டோபர் 24 (புதன்)   விஜயதசமி (தசரா)

13. அக்டோபர் 27 (சனி)   பக்ரீத்

14. நவம்பர் 13 (செவ்வாய்)   தீபாவளி

15. நவம்பர் 25 (ஞாயிறு)   முகரம் பண்டிகை

16. நவம்பர் 28 (புதன்)   குருநானக் பிறந்த நாள்

17. டிசம்பர் 25 (செவ்வாய்)   கிறிஸ்துமஸ் பண்டிகை

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
 

Thursday, December 08, 2011

முஸ்லிம்மை தீவிரவாதி என்பதா? அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம் கடுமை

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் ‘ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்’ என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது

Saturday, November 12, 2011

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ”டிரெமஸ்டர் சிஸ்டம்” மாணர்வகளின் சுமையை குறைக்க புதிய க்ரேடிங் முறைக்கு அரசு உத்தரவு

2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை – ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)
49 முதல் 54 வரை – ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)
43 முதல் 48 வரை – பி 1 கிரேடு (பாயிண்ட்
37 முதல் 42 வரை – பி 2 கிரேடு (பாயிண்ட் 7)
31 முதல் 36 வரை – சி 1 கிரேடு (பாயிண்ட் 6)
25 முதல் 30 வரை – சி 2 கிரேடு (பாயிண்ட் 5)
19 முதல் 24 வரை – டி கிரேடு (பாயிண்ட் 4)
13 முதல் 18 வரை – இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)
12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் – இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்ஸ் தமிழ்

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பலி போடும் கையாலாகாத காவல்துறையும் மீடியாவும் – பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்

“நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்” என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். “உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது” என்றார்.

“அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்தி இணையதளம்

Wednesday, October 19, 2011

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.

வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.
அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

நன்றி: தமிழ் சிஎன்என்

Saturday, October 15, 2011

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன.

ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய அரசால் ஒதுக்கபடுகின்றன.அதற்கு என்ன அது தெரிந்ததுதானே என்று சிலர் நினைக்கலாம். தெரியாத விசயங்கள் உள்ளது ஊரில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள் மூலம் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிசனாக(லஞ்சமாக) 4 சதவிகிதம் அதிகமாக வழங்கபடுகிறது. அட போங்க சார் இது நம்ம இந்தியால என்ன பெரிய  விசயமா ?என்று கேக்கலாம் தேசிய அளவில் நடக்கும் ஊழல்கள்  நம்மை எந்த அளவில் பாதிகின்றன என்பதை நாம் இன்னும் உணராமல் இல்லை (விலைவாசி உயர்வு,பெட்ரோல்,கேஸ்,போன்றவைகளின்விலை உயர்வு)நேரடியாகவே பாதிகின்றன.உள்ளாட்சிகளில் நடக்கும் ஊழல்கள் நமது ஊரில் நடக்கும் திட்டங்களில் தரமின்மையாலும்,பஞ்சாயத்துகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளினாலும் பாமரனும் பாதிக்கபடுகிறான்.

கிராம நிர்வாக அலுவலரில் இருந்து தாசில்தார் வரை லஞ்சம் அளித்தால்தான் நமக்கு தேவையான ஆவணங்களை  பெற முடியும்.இப்படி லஞ்சம் புரையோடி உள்ள நாட்டில் யாரு என்னதான் செய்ய முடியும் என்று நினைத்து நாமும் பழகி விட்டோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக ஒரு ஊழலற்ற MLA வையோ MP யைய்யோ  நம்மால் தேர்ந்தெடுக்க  முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் கண்டிப்பாக ஒரு வார்டு கவுன்சிலரை,பஞ்சாயத் தலைவரை,நகராட்சி தலைவரை, உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடும் கிராம புற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும் இதில் கண்டிப்பாக அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற நிர்வாகத்தை தரமாட்டார்கள் அப்படியே அவர்கள் நல்லவர்களாக  இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியினர் அவர்களை நல்லவர்களாக் இருக்கவிடுவதில்லை.அதனால் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டி இடுபவர்களிலும்  அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை முறையை பார்த்து தேர்ந்தெடுப்பதே நல்லது

யார் ஒருவர் பதவி ஆசை இல்லாமல் பொது சேவைகளை பெருமைக்கு செய்யாமல்,தானா தர்மங்களை பிறர் காண செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களை போன்றவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே தங்களுடைய குடும்பத்தினரின்  பொன்னான வாக்குகளை மேற்கண்டவிசயங்களை சிந்தித்து இந்த  செய்தியை படிக்கும் நண்பர்கள்  தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என நமது  ஊரின்,மாவட்டத்தின், நாட்டின்  நலன் கருதி ஒரு ஊழலற்ற பஞ்சாயத்து,நகராட்சி,மாநகராட்சி  ( தலைவரை) வார்டு உறுப்பினர்களை,கவுன்சிலர்களை ,மேயர்களை தேர்ந்தெடுக்க  வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.
 
THANKS : முகைதீன்