இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, June 20, 2011

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை

கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் நான்கு பள்ளிகள் உட்பட பல பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்தக் கோரி, 6,355 தனியார் பள்ளிகள், ரவிராஜபாண்டியன் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன. இந்தப் பள்ளிகளுக்கு கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் புதிய கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, பெற்றோர் அமைப்புகளும், பெற்றோர்களும் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளிகள் திறந்து சில தினங்கள் கடந்த நிலையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது, அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல பள்ளிகளில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிப்பதால், கல்வித் துறைக்கு தலைவலியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: குழு நிர்ணயித்த கட்டணத்தை விட பல பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களுக்கு உட்பட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். சென்னையில் நான்கு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது குறித்த புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

THANKS : DINAMLAR

Sunday, June 19, 2011

சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்...

சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு ஆண்டு (2011 -12) பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வி உதவி தொகைகள் பெற முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீ தத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.


கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4.7.2011க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 11.7.2011க்குள்ளும் கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் அளிக்க வேண்டும. இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.


கல்வி நிலையங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதிய உதவி பெறுவதற்கான கேட்பு பட்டியலை 20.07.11க்குள்ளும், புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை 15.7.11க்குள்ளும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Saturday, June 18, 2011

பள்ளி சிறுவர்களை பாழாக்கும் புதுவித லாட்டரி

கோவையில் பள்ளிகளின் அருகில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சிறுவர்களுக்கான சுரண்டல் பரிசுச் சீட்டுகள், அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்களிடம் சூதாட்ட மோகத்தைத் தூண்டும் இவ்வகை பரிசுச் சீட்டுகளை தடை செய்ய, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 
ஏழை, எளிய மக்களின் குடும்ப பொருளாதாரத்தைச் சுரண்டி வந்த லாட்டரி சீட்டு விற்பனை, தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி பல இடங்களில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக, பரவலாக புகார் உள்ளது. லாட்டரி சீட்டு போன்றே, பள்ளிச் சிறுவர்களைக் குறிவைத்து, பெட்டிக் கடை, ரோட்டோர கடைகளில், "லக்கி பிரைஸ்' என்ற பெயரில், சுரண்டல் பரிசுச் சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. சிறுவர்கள், ஒரு கூப்பனை 50 பைசா கொடுத்து வாங்கி, அதிலுள்ள எண்களை சுரண்டும்போது, பரிசுக்குரிய எண்கள் இருந்தால், பணம் அல்லது பொருள் வழங்கப்படுமென, கடைக்காரர்கள் கூறுகின்றனர். இது போன்ற பரிசுச் சீட்டுகள், பள்ளி அருகிலுள்ள கடைகளிலேயே அதிகம் விற்கப்படுகின்றன.

 
சூதாட்ட மோகத்துக்கு உள்ளாகும் சிறுவர்கள், தங்கள் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து, கடைகளில் கொடுத்து சீட்டு வாங்கி சுரண்டுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனால், பள்ளி அருகிலுள்ள பெட்டிக் கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது. நடிகர், நடிகைகளின் போட்டோவுடன், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, அதன் மீது பரிசுக்கான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; இதைப் பார்க்கும் சிறுவர்கள், எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். இதுவும் ஒரு வகையான லாட்டரிச் சீட்டு தான். சிறு வயதிலேயே, சுரண்டல் மூலம் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்படும் எண்ணம், பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகிறது. உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு மாறாக, உழைக்காமலும் சேர்க்க முடியும் என்ற விஷ விதையை விதைக்கிறது. இது போன்ற பரிசுச்சீட்டுகளை தடை செய்ய மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "குலுக்கல் மற்றும் லாட்டரிச் சீட்டு, சுரண்டல் முறைகளில் பரிசு வழங்குவது, "பணச்சுழற்சி மற்றும் பரிசுச் சீட்டு சட்டத்தின்'படி குற்றமாகும். இதுபோன்ற குற்றங்கள் குறித்து தகவல் அறிவோர், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

 
உடல் நலனுக்கும் தீங்கு: பரிசுச் சீட்டு சுரண்டலில் ஈடுபடும் சிறுவர்கள் பணத்தை இழப்பதுடன், ஆரோக்கிய குறைபாட்டுக்கும் ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. பரிசுச் சீட்டில் எண்களை மறைத்துள்ள, "அலுமினியக் கோட்டிங்கை' விரல் நகத்தால் சிறுவர்கள் பலரும் சுரண்டுகின்றனர். அப்போது, அலுமினிய துகள்கள் நகத்தின் இடுக்குகளில் படிந்து விடுகின்றன. சாப்பிடும் சிறுவர்கள் பலரும் கையை சுத்தமாக கழுவத் தெரியாதவர்களாக உள்ளனர். அவ்வாறு, கழுவாத போது, நக இடுக்கில் படிந்திருக்கும் அலுமினிய துகள்களும் உணவுடன் சேர்ந்து, வயிற்றுக்குள் போய்விடும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு நிகழும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்தும், சுரண்டல் பரிசுச் சீட்டுகளை வாங்கக் கூடாதெனவும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.

THANKS : DINAMALAR

Thursday, June 16, 2011

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

THANKS : DINAMALAR.

Wednesday, June 15, 2011

இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம் பேச்சு

 ''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர், ஊழலுக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான், இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சி.பி.எஸ்.சி. மற்றும் வேதபாடச்சாலையுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்தீர் பள்ளி திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பள்ளியை திறந்துவைத்து பேசியதாவது:

நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும். பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியோரால் நல்லொழுக்கத்தை கொடுக்க முடியும். தற்போது, ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக இருக்கிறது. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என நான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். இ-மெயில்களும் வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் தான் லஞ்சத்தை தங்கள் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். "ஊழல் என்பது எனக்கு இழுக்கு' என்று ஒவ்வொருவரும் நினைக்கின்ற சூழல் வரவேண்டும். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபடுகிறது என வைத்துக்கொண்டால் கூட அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது. ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஊழலால் வந்த பணத்தால் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் பெற்றோர்களை ஊழலில் இருந்து மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதம் இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் பெற்றோர்கள் மீது செலுத்தினால் லஞ்சத்தை விட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால் தான் பெற்ற பிள்ளையே அவமானமாக நினைப்பதை, ஒரு இழிவான செயலான ஊழலை செய்ய எந்த ஒரு பெற்றோருக்கும் மனது வராது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர் லஞ்சத்திற்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு ஊழலில் இருந்து விடுபடும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதற்காக இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த இயக்கத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராகலாம். தலைவர் என்று யாரும் இல்லை. "என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையாக மாற்றுவேயானால் நாடு மாறும். எல்லோரும் இதில் ஈடுபட்டு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

THANKS : DINAMALAR

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது. பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில். உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. காங்கோ குடியரசு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக் இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.
 
பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். 2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.
 
மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
 
கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக இருந்துவருகின்றது . 
 
THANKS : MAALAIMALAR

Tuesday, June 14, 2011

செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும்...

மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
 14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
 இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!
 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
 செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
 அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
 உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
THANKS : DINAMANI